திருச்சி மாவட்டம் லால்குடியில் வசித்துவருபவர் ராஜமாணிக்கம். இவர் ஆல்பா எஜுகேஷன் டிரஸ்ட் என்ற கல்வி அறக்கட்டளையை நடத்திவருகிறார். இந்த அறக்கட்டளையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அப்போது திருச்சியில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த செல்வமணிக்கு தமிழ்நாடு அரசு 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் செல்வமணி, அவருடன் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் ஆகிய இருவரும் அறக்கட்டளையை ஆய்வு செய்தனர். அறக்கட்டளையின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் அதற்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்ய ரூ.25,000 அளிக்குமாறு செல்வமணி கேட்டுள்ளார்.
இதற்கு மனமில்லாத ராஜமாணிக்கம் நாளை தருவதாக கூறிவிட்டு, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கையூட்டு வாங்கவந்த துணைக் கண்காணிப்பாளர் செல்வமணி, உதவி ஆய்வாளர் சந்திரமோகன் ஆகிய இருவரும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினர்.