தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென இடிந்து விழுந்த முக்கொம்பு வாய்க்கால் பால தடுப்புச்சுவர் - trichy Latest News

திருச்சி: முக்கொம்பு அருகே 86 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

trichy
trichy

By

Published : Jun 11, 2020, 11:29 PM IST

Updated : Jun 12, 2020, 12:00 AM IST

திருச்சி மாவட்டம், முக்கொம்பு காவிரி ஆற்றில் மேலணை உள்ளது. இந்த முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஆங்கிலேயர் ஆட்சி கால தடுப்பணை வெள்ளப்பெருக்கில் உடைந்தது.

இதனால் பல லட்சம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. தற்போது அந்த இடத்தில் தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அதன் அருகிலேயே புதிதாக தடுப்பணைக் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் 40 விழுக்காட்டுப் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து பெருவளை வாய்க்கால் திருச்சி- முசிறி சாலையில் பிரிகிறது.

இந்த வாய்க்கால் மண்ணச்சநல்லூர் வழியாக லால்குடி வரை சென்றடைகிறது. இதன்மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் முக்கொம்பு அருகே அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது.

86 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பாலம் செங்கலால் கட்டப்பட்ட பாலம் ஆகும்.

இந்தப் பகுதிக்கு அருகே தற்போது குடிமராமத்துப் பணித் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் வாய்க்காலில் பணியாற்றி வருகின்றன. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, முக்கொம்பில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த நிலையில் திடீரென தடுப்புச் சுவர் சரிந்து விழுந்துள்ளதால் இந்த வாய்க்காலில் தண்ணீர் திறப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் பாலம் வழியாக 15 கிராமங்களுக்கு மக்கள் சென்று வந்தனர். தற்போது சுவர் இடிந்து விழுந்ததால், பாலம் முற்றிலும் நிலைகுலைந்து உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாடவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் 15 கிராமங்களும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், பாசனம் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Last Updated : Jun 12, 2020, 12:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details