தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடிந்த வாய்க்கால் தடுப்பு சுவர் சீரமைப்பு பணி மும்முரம் - வாய்க்கால் தடுப்புச்சுவர் சீரமைப்பு பணி

திருச்சி : முக்கொம்பு அருகே வாத்தலை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிந்து விழுந்த வாய்க்கால் தடுப்பு சுவரை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

trichy bridge renovation work started
trichy bridge renovation work started

By

Published : Jun 14, 2020, 4:26 PM IST

திருச்சி மாவட்டம், முக்கொம்பு காவிரி ஆற்றில் மேலணை உள்ளது. இந்த முக்கொம்பு மேலணையின் காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஆங்கிலேயர் ஆட்சிக் கால தடுப்பணை வெள்ளப் பெருக்கில் உடைந்தது. இதனால் பல லட்சம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

பின்னர் அந்த இடத்தில் தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே புதிதாக தடுப்பணை கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதில் 40 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டன.

முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து பெருவளை வாய்க்கால் திருச்சி - முசிறி சாலையில் பிரிகிறது. இந்த வாய்க்கால் மண்ணச்சநல்லூர் வழியாக லால்குடி வரை சென்றடைகிறது. இதன்மூலம் 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் முக்கொம்பு அருகே வாத்தலை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் தடுப்பு சுவர் நேற்று முன்தினம் (ஜூன் 11) திடீரென இடிந்து விழுந்தது. 1934ஆம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒருபுற தடுப்பு சுவர், திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே தற்போது குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பாலம் வழியாக 15 கிராமங்களுக்கு மக்கள் சென்று வந்தனர். தற்போது சுவர் இடிந்து விழுந்ததால் பாலம் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறும் மக்கள் நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாலத்தை சீரமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. தற்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஒரு சில தினங்களில் தண்ணீர் திருச்சி முக்கொம்பை வந்தைடைய உள்ளது. இதனால் வாய்க்காலில் தடுப்புச்சுவரை ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் தடுப்புச் சுவராக மாற்றி அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை லால்குடி பிரிவு உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் கூறுகையில், ”இந்த வாய்க்காலின் மேற்புறம் முந்தைய காலத்தில் மதகு என்ற அடிப்படையில்தான் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக இதன்மீது சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்தத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் இவற்றை சீரமைக்கும் பணி இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை அடையும்போது விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இந்த வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விடும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த மூன்று முதல் ஐந்து தினங்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். இதனால் விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த சுவர் தற்போது கான்கிரீட் சுவராக அமைக்கப்படுகிறது. நான்கு மீட்டர் உயரத்திற்கு சுவர் அமைத்து அதன் மீது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தப் பாலம் மேலும் வலுபெறும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... திடீரென இடிந்து விழுந்த முக்கொம்பு வாய்க்கால் பால தடுப்புச்சுவர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details