இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் ஒன்று. துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு உள்ளூர் விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 12 விழுக்காடு பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகள் தற்போது வந்துசெல்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 2025ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.25 மில்லியனாக இருக்கும். எனவே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 950 கோடி ரூபாய் செலவில் புதிய டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் 75 ஆயிரம் சதுர அடியில், உள்ளூர் பயணிகள் 600 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாள வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளை கையாள 48 கவுன்டர்களும், எமிகிரேஷன், இமிகிரேஷனுக்கு தலா 40 கவன்டர்களும், புறப்பாடு பயணிகளுக்கு 10 நுழைவு வாயில்களும், வருகை தரும் பயணிகளுக்கு 6 நுழைவு வாயில்களும் அமைக்கப்படுகிறன்றன.