திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"கரோனா வைரஸ் 195 நாடுகளில் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களையும், புகார்களை தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கியது முதல் தற்போது வரை 195 புகார்கள் வந்துள்ளன. இதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
திருச்சி - மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடி புதிய காய்கறி வணிக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 78 ஆண்கள், 34 பெண்கள் என 112 வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்த வகையில் கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 86 பயணிகள் வந்தனர். இதில் 22 பயணிகளுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது பயணி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதே விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4,120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த வகையில் 2,262 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உத்தரவை மீறி வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 36 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்தக்கூடாது. இதுபோன்ற புகார்கள் வந்தால் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
இதையும் படிங்க: பிரட்டன் பிரதமருக்கு கரோனா