திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் திருக்குமரன். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம்வழக்கம்போல்பணிக்குச் சென்ற திருக்குமரன், பயணிகளை ஏற்றிக்கொண்டு மதியம் 3 மணியளவில் திருச்சி நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சிறுமயங்குடி அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநர் திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் பேருந்தை சாமர்த்தியமாக ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி நடத்துநர் நாகராஜிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
உடனடியாக மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த லால்குடி போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்த நிலையில், பேருந்து சென்ற சாலையின் இருபுறமும் ஆற்றில் தண்ணீர் ஓடியுள்ளது. இந்நிலையில், ஓட்டுநர் திருக்குமரன் சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நீலகிரியில் 30 பயணிகளுடன் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து!