திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சமூக நல ஆர்வலர்கள் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுரவ தலைவராக டிராபிக் ராமசாமி கலந்துகொண்டார்.
'விவசாயிகளை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி' - டிராபிக் ராமசாமி
திருச்சி: புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை ஏமாற்றி வருவதாக, டிராபிக் ராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில், மணப்பாறையில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்துத் தர வேண்டும், மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உசிலம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஜிஎச்சிஎல் நிர்வாகத்திடமிருந்து நிலங்களை உடனடியாக மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிராபிக் ராமசாமி கூறுகையில், "ஜிஎச்சிஎல் நிறுவனத்திடம் உள்ள நிலங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் மீட்டு மக்களுக்கு வழங்கு வேண்டும். இல்லையென்றால், அறப் போராட்டம் நடத்தப்படும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பேசிவருகிறார்" என்றார்.