திருச்சி சிங்காரத்தோப்பு மேலபுலிவார்டு ரோடில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தை கடந்த 1905ம் ஆண்டு முதல் சிட்டி கிளப் என்ற பெயரில் பொழுதுபோக்கு மன்றம் செயல்பட்டு வந்தது. 85 ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தை சிட்டி கிளப் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. 85ஆம் ஆண்டு கால குத்தகை 1989ஆம் ஆண்டு முடிவடைந்து. மேலும், இந்த சிட்டி கிளப் நிர்வாகத்திற்கு 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டில் இந்த நிலம் மாநகராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கு தேவைப்படுவதால் நீட்டிக்கப்பட்ட குத்தகையை ரத்து செய்யப்பட்டதாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இந்த முடிவினை ஏற்க மறுத்த சிட்டி கிளப் நிர்வாகம், இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
தரைமட்டமாக்கப்பட்ட சிட்டி கிளப் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந் மார்ச் 27ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மாநகராட்சி கொடுத்த கால அவகாச கெடு முடிந்தும் சிட்டி கிளப் நிர்வாகம் இடத்தை காலி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதனால், இன்று காலை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று சிட்டி கிளப் நிலத்தை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக மாநகராட்சியின் வாகனங்கள், பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மலர் செழியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனிடையே, அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சிட்டி கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.