108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான கோயிலாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் புகழப்படுகிறது. அந்த கோயிலுக்கு ஸ்ரீமான் மதுரகவி படையாட்சியார் என்பவரால் உயில் எழுதி வைக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் போலி அறக்கட்டளை மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாமக கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பிரின்ஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மாம்பழ சாலை பகுதியில் ஸ்ரீமான் மதுரகவி படையாட்சியாருக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றை போலி அறக்கட்டளை மூலம் சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவில் சொத்துக்கள் போலி அறக்கட்டளை மூலம் ஆக்கிரமிப்பு இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அறக்கட்டளைக்கு எதிராக ஏற்கனவே கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனினும் இந்த போலி அறக்கட்டளை சார்பில் தனிநபர் ஒருவரது பெயரில் கிரையம் செய்யப்பட்ட நிலத்தில் கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த சொத்துகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்று ஸ்ரீமான் மதுரகவி படையாட்சியார் உயில் எழுதி வைத்துள்ளார்.
அதனால் இவை அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த உயிலும் முறையாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறநிலையத் துறையின் உதவியுடன் இந்த சொத்துகளை சட்டவிரோதமாகப் போலி அறக்கட்டளை மூலம் ஆக்கிரமித்து விற்பனை செய்யும் செயலில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். அவற்றை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக அந்த கோயில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கோயில் சொத்துகளை அனுபவித்து வந்தால் அதுவும் ஆக்கிரமிப்புதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்