தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராப்பத்து 3ஆம் நாள்: சாய் முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் - இன்றைய சிறப்பு அலங்காரம் v

ஸ்ரீரங்கம் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகச் சிறப்புடன் விளங்குகிறது. இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகல்பத்து நிகழ்ச்சியில் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

By

Published : Dec 28, 2020, 6:58 AM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நாள்கள் பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது.

ராப்பத்து 3ஆம் நாள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான நேற்று (டிச. 27) காலை 6 மணி முதல் 9 மணி வரை மூலவர் ரங்கநாத பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு ஆரியபட்டால் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் பிற்பகல் 12 மணிக்கு ஆரியபட்டால் நுழைவுவாயில் திறக்கப்பட்டது.
அதேபோல் ஒரு மணிக்குச் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. 1 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

இன்றைய சிறப்பு அலங்காரம்

சாய் முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ராப்பத்து நிகழ்ச்சியின் மூன்றாம் திருநாளில் நம்பெருமாள் சாய்முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், ரத்தின காது காப்பு, பவளமலை, திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ராப்பத்து வைபவத்தின் இரண்டாம் நாள் உற்சவம்!

ABOUT THE AUTHOR

...view details