திருச்சி : காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை கண்டித்து, திருச்சியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகளை வழிமறித்து தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 58 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும், டெல்டாவை பாலைவனமாக்கி பெட்ரோல், டீசல், மீத்தேன் கனிம வளங்களை கார்ப்ரேட் கம்பெனி எடுத்து சுரண்டும் நிலைக்கு தள்ளப்படும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற பந்தை கண்டித்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து முன் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொடுக்கும் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும் வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவிற்கு செல்ல வேண்டிய பேருந்து தாமதமாக சென்றது. மேலும், பேருந்து நிலையத்தில் பரபரப்பு சூழல் நிலவியது.