திருச்சி:திருச்சி மாநகர் கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆயுதப் படை காவலர் திருமண மண்டபத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் முதல் முறையாக நடமாடும் முழு உடல் பரிசோதனை கூட வாகனத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. மேலும், 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்ப நலனை கருத்தில் கொண்டு, இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (ஜூலை 13) முதல் வருகிற 18ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, ஈசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமைச் செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு!