திருச்சி: திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் (பிஷப்) கல்லூரியில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர், திருச்சி மத்திய மாவட்ட காவல் துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், திருச்சி காவல்துறை ஆணையர் (தெற்கு) செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இந்த போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் கே.சங்கர் அவர்கள் பேசுகையில், "போதைப் பொருள் ஒழிப்பு என்பது புனிதமான விசயம். உங்களில் எத்தனை மாணவர்கள் போலீஸ் ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவருமே போலீஸ் தான். போதைப் பொருளை ஒழிப்பதற்கான சிறப்பு போலீஸ். தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பொருள் இல்லாத உலகத்தை உருவாக்குவோம் என்றார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். போதைப் பொருளை ஒட்டு மொத்தமாக புரக்கணிக்க வேண்டும், உபயோகிக்கக் கூடாது.
முன்னர் பேசியவர்கள், போதைப் பொருளை பொருத்தவரை அதை சாப்பிட்டால் என்ன நிகழும், என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வரும். மனரீதியான, உடல் ரீதியாக என்ன பிரச்னை வரும் எனத் தெளிவாக கூறினார்கள். ஆனால் அதை சாப்பிடவே கூடாது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவர்களை கைது செய்யும் அனைத்து முயற்சிகளையும் காவல்துறை எடுத்து வருகிறோம். ஆனால் அது மட்டும் போதாது. போதைப் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடிய மக்கள், மாணவர்கள் தான் எடுக்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.