திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியபோது, "தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில், 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
மேலும், திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீனமயப்படுத்த 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2,302,44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
அதோடு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு பங்குப் பகிர்வு மாதிரி அடிப்படையில், மத்திய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீப காலமாக இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.