திருச்சி: காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை (செப்.24) நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "தந்தை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் வருகை தர வேண்டும்.
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தற்போது பயிலும் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், இது உடனடியாக நடைமுறைக்கு வராது. தேர்தல் நெருங்குவதால் இதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.
நாங்களும் இதற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். இதனை நிறைவேற்றுவதற்கு முன்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை. கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பதுபோல் தெரிகிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம்.