அரசு சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுத் தலைவர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதன் ஒரு கட்டமாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் நடைபெறும் புதிய தடுப்பணை கட்டுமான பணிகளை தோப்பு வெங்கடாசலம் பார்வையிட்டார்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அரசின் திட்டங்களை மதிப்பீடு செய்வது, திட்டங்களுக்கான கால அளவு, உறுதி தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளோம். குடிமராமத்து பணிகள், வேளாண் பணிகள், ஊரக வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
திருச்சி முக்கொம்பில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை 2018ஆம் ஆண்டு அதிக அளவு தண்ணீர் வந்ததால் உடைந்தது. இதனையடுத்து புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனை கட்டி முடிக்க 24 மாத கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது எட்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி 2021 மார்ச்சுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.
5 லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் தாங்கக் கூடிய அளவில் அணை கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மக்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அரசின் அனைத்து பணிகளும் சிறப்பாகவும் ,நூறு சதவீதம் நேர்த்தியாகவும் நடைபெற்று வருகிறது.
எங்கள் ஆய்வு மிகவும் திருப்திகரமாக உள்ளது. ஆய்வின் அறிக்கை சட்டமன்ற செயலாளர் மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்படும்" என்றார்.