திருமாவளவன் எம்பி மக்கள் அதிகாரம் அமைப்பு மாநாட்டில் பேச்சு திருச்சி: 2024 நாடாளுமன்ற தேர்தலில், I.N.D.I.A. கூட்டணியை ஆதரிக்கவும், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நேற்று (ஜன.7) திருச்சியில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மற்றும் திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், '2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய மண்ணில் நடக்கப்போகும், ஒரு இறுதி யுத்தம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் எந்த உரையாடல்களையும் நடத்த முடியாது. மண்ணையும், மக்களையும் காப்பாற்ற முடியாது; மிகப்பெரிய நெருக்கடிக்குள் நாம் அனைவரும் தள்ளப்படுவோம். இது யூகமோ, பாஜக மீது காட்டப்படும் வெறுப்பு அரசியலோ இல்லை. மண்ணையும், மக்களையும் காப்பதற்கான அரசியல்.
காங்கிரஸ் கட்சி எந்த களத்தில் நின்று பா.ஜ.க வை எதிர்க்கிறதோ, அதே களத்தில் நிற்க வேண்டிய தேவை மக்கள் அதிகாரத்திற்கும் வந்துள்ளது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு. எந்த நோக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதோ, அதை அடையப்போகும் மமதையில் பாஜக இருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறிப்பது, சி.ஏ.ஏ சட்டம் (CAA) உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். இந்தியாவை இந்தி மையப்படுத்துவது, சமஸ்கிருத மையப்படுத்து ஆகிய வற்றில் வெற்றி கண்டு வருகிறார்கள். தேசத்தை கார்ப்பரேட் மையமாக்கி வருகிறார்கள்.
மக்களுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும், அரசியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும் செயல்பட்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் நிறைவேற்றி வருகிறார்கள். பாஜகவை தோற்கடிப்பது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பை வீழ்த்துவது. நூற்றாண்டைக் கொண்டாட உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த நாட்டை, இந்து நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளது.
சைவ மதம் உருவானதே பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து தான். இன்று சைவமும், வைணவமும் விழுங்கப்பட்டு வருகிறது. பார்ப்பனியம் என்பது புத்தர் காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்தது. இந்துத்துவாவின் எதிரி முஸ்லீம்களோ, கிறிஸ்துவர்களோ எதிரி அல்ல அவர்களின் உண்மையான எதிரி அம்பேத்கர் இயற்றிய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தான்.
சங்பரிவாரர்களின் முதல் பகை நம் அரசியலமைப்பு சட்டம் தான். அவர்களின் பல்வேறு திட்டங்களுக்கு இன்றும் தடையாக இருப்பது அரசியலமைப்பு சட்டம் தான். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை அழித்து விடுவார்கள். எனவே, அவர்களை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் நாம் ஒன்றிணைந்து தடுத்திட வேண்டும்' எனப் பேசினார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?