திருச்சி:திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வு துறை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
அதில் அவர், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியே தொடர வேண்டும் என்பதற்கான வெற்றியாக இது அமைந்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், இது முதலமைச்சருக்கு கிடைத்த அங்கீகாரம். அதிமுக கூட்டணி என்பது சிதறிப் போனது. அவர்களுக்கு இடையில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. முதலில் அதை பலவீனப்படுத்தியது, பாமக. இரண்டாவது அதிமுக உட்கட்சி குழப்பம். அடுத்து, எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என குழம்பிய பாஜகவின் நிலைப்பாடு.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை அரவணைத்து செல்லக் கூடிய ஆளுமை தமிழ்நாடு பாஜகவில் இல்லை. இந்த காரணங்கள்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். திமுக கூட்டணி 2019ஆம் ஆண்டில் இருந்து வலுவாக உள்ளது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர்.