திருச்சி மாவட்டம் வயலூரில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க 9ஆவது மாநில செயற்குழு கூட்டம் நேற்று (அக்.11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்க நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். இதில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், பாஜக அதிமுக கூட்டணியில் எந்தவொரு குழப்பமும், சலசலப்பும் இல்லை என்றார்.
மேலும், புதிய கூட்டணி தேவை என்பது குறித்த பேச்சுக்கு தற்போதைக்கு இடமில்லை. கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை எடுக்கும் எனத் தெரிவித்த அவர், அதிமுக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.
பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து கேட்கும் போது, பிற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது மத்திய அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.