திருச்சி:திருச்சியைச்சேர்ந்த ஒருவரை சில நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை காவல் துறையைச்சார்ந்தவரெனக் கூறிக்கொண்டார்.
மேலும், ”நீங்கள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளீர்கள்...! இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளோம்” என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போனவர் தன் மீது வழக்கு ஏதும் பதியவேண்டாம் என கேட்டுக்கொண்டார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர், அப்படியானால் தனது வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதல் தவணையாக ரூபாய் 5000 ரூபாயும், அடுத்த தவணையாக ரூ.15,600 என மொத்தம் ரூ. 20,600யை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.