தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் ஓங்கும் பேரன்களின் கை! - வெத திருச்சியில போட்டாச்சு...! - anbil mahesh

திருச்சி: திமுகவின் எதிர்கால வாரிசு அரசியலுக்கான விதை திருச்சியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

The rising of grandsons in DMK

By

Published : Feb 4, 2020, 1:17 PM IST

திமுகவுக்கு திருச்சி பல திருப்புமுனைகளை அளித்தது என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவார். அப்படி அவர் பேசுவதற்குக் காரணமானவர்களின் முக்கியமானவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்த அன்பில் தர்மலிங்கம் பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றார். 'அன்பில் அழைக்கிறார்' என்று தலைப்பிட்டு 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுக்கு அறிஞர் அண்ணா 'திராவிட நாடு' இதழில் அழைப்பு விடுத்திருந்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அன்பில் தர்மலிங்கம்

ஊராட்சிமன்றத் தலைவர், கூட்டுறவுச் சங்க இயக்குநர், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், சென்னை கூட்டுறவு வங்கி இயக்குநர், திருச்சி மாவட்ட திமுக செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், கருணாநிதி அமைச்சரவையில் வேளாண்மை, உள்ளாட்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு, வருவாய் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் என அனைத்து நிலை பொறுப்புகளையும் அன்பில் தர்மலிங்கம் வகித்துள்ளார்.

திருச்சியில் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன்பில் தர்மலிங்கத்திற்கு எப்போதும் முதலிடம்தான்.இவரைத் தொடர்ந்து பொன்மலை பராங்குசம், து.ப. அழகமுத்து, திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், எம்.எஸ். மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர. நடராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரிராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி. கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம்பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீஃப் என்ற நீண்ட பட்டியல் உண்டு.

அன்பில் தர்மலிங்கத்து மாலை அணிவிக்கும் கருணாநிதி

அன்பில் தர்மலிங்கம் உயிருடன் இருந்தபோதே திருச்சி மாவட்ட திமுக செயலாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பதவி வகித்தார். செல்வராஜ், மாநகர செயலாளராக இருந்த மறைந்த மலர்மன்னன் ஆகியோருடன் அன்பில் தர்மலிங்கத்திற்கு ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக லால்குடி கானக்கிளியனல்லூரில் இருந்த கே.என். நேரு திருச்சிக்கு அழைத்துவரப்பட்டார்.

இடையில் வைகோ தலைமையில் மதிமுக உருவானபோது திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த செல்வராஜும் மலர்மன்னனும் அங்கு சென்றுவிட்டனர். அப்போதுதான் கே.என். நேரு திருச்சி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது முதல் தனது துடிப்பான செயல்பாடுகளால் 18 ஆண்டுகள் அந்தப் பதவியை தக்கவைத்திருந்தார்.

நட்புக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அன்பில் தர்மலிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் அன்பில் பொய்யாமொழி திமுக சார்பில் திருச்சியில் களம் இறக்கப்பட்டார். 1989, 1996ஆம் ஆண்டுகளில் திருச்சி இரண்டாவது சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அன்பில் பொய்யாமொழியும், கருணாநிதி மகன் ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாக வலம்வந்தனர். இருவரும் கட்சிக்கு அப்பாற்பட்ட குடும்ப நண்பர்களாகப் பழகினர். இவர்களின் நட்பைப் பார்த்து திருச்சி மாவட்ட செயலாளர் பதவியும் அமைச்சர் பதவியும் பொய்யாமொழிக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அன்பில் பொய்யாமொழி அகால மரணமடைந்தார்.

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அன்பில் மகேஷ்

இதன்பின்னர் அன்பிலார் குடும்பத்திற்கு மீண்டும் வாய்ப்பளிக்க கருணாநிதி முடிவுசெய்தார். பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழிக்கு அப்போது வயது குறைவு. அதனால் பொய்யாமொழி மறைவு காரணமாக நடந்த இடைத்தேர்தலில் அவரது சகோதரர் அன்பில் பெரியசாமிக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். இவர்களைத் தொடர்ந்து ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழியும் நெருங்கிய நண்பர்களாக வலம்வரத் தொடங்கினர். உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக மகேஷ் உள்ளார். இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இப்படி ஒருபுறம் அன்பில் குடும்பத்தினர் திமுகவில் வலுவான நிலையில் இருந்தபோதும், திருச்சி சிவா, செல்வராஜ், செல்வேந்திரன், கே.கே.எம். தங்கராசு, நாகவேணி வேலு போன்றவர்களின் எதிர்ப்பையும் மீறி கே.என். நேரு திருச்சி மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் கோலோச்சினார். தற்போது கருணாநிதியின் மறைவுக்குப் பின்னரே கே.என். நேருவிடமிருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மகேஷ் பொய்யாமொழிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த நிர்வாகிகள் தன் அருகில் இருக்க வேண்டும் என்று கே.என். நேருவைச் சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு முதன்மைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு காலத்தில் கருணாநிதியால் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி திமுகவில் மண்டல செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இந்தப் பதவியிலும் நேருதான் தலைமைவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்தப் பதவி கலைக்கப்பட்டது.

இளைஞரணிச் செயலாளரான உதயநிதியை வாழ்த்திய அன்பில் மகேஷ்

ஏற்கனவே திருச்சி மாவட்டம், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளராக கே.என். நேரு ஆகியோர் இருந்தனர். தற்போது திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட பொறுப்பாளராக காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம், லால்குடி, திருச்சி மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணி, திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனனே உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டு அவரது வாரிசு அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் உதயநிதியின் கை ஓங்கியிருக்கும் வகையில்தான் தற்போது அவரது ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்பம் திருச்சியில் தொடங்கியுள்ளது என்கிறார் திமுக நிர்வாகி ஒருவர். இதைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற மாற்றங்கள் தொடங்கியிருப்பது இதை ஊர்ஜிதப்படுத்தும்விதமாகவே அமைந்துள்ளது.

அன்பில் மகேஷ்

எனினும், திருச்சியைப் பொறுத்தவரை ‘ஒன் மேன் ஷோவாக கே.என். நேரு வலம்வந்தார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியினர் அவரை அமைச்சர் என்று அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புதிய மாவட்ட பொறுப்பாளர்களின் மகேஷ் பொய்யாமொழியைத் தவிர இரண்டு மாவட்ட செயலாளர்களும் நேருவின் ஆதரவாளர்கள். அதனால் மகேஷ் மட்டுமே தனித்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அன்பில் பொய்யாமொழி மறைவால் தவித்துவந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டம் மகேஷ் நியமனத்தைக் கொண்டாடிவருகிறது.

கேக் ஊட்டும் ஸ்டாலின்

இந்த வகையில் திமுகவில் மூன்றாவது தலைமுறையான பெயரன், பெயர்த்திகளின் அரசியல் தலைதூக்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதன் தொடக்கமாகவே திருச்சியில் கருணாநிதியின் பெயரனும் அன்பின் தர்மலிங்கத்தின் பெயரனும் கைகோத்துள்ளனர் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய தலைமைக்குத் தயாராகும் திமுக இளைஞரணி... உதயமாகிறாரா உதயநிதி?

ABOUT THE AUTHOR

...view details