டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்ற கலவரம் குறித்து, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், "டெல்லியில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். நீதிபதிகளும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
மத்திய அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குண்டர்களையும், காவல் துறையையும் வைத்து எந்தப் போராட்டத்தையும் ஒடுக்கிவிட முடியாது. சட்டம் என்பது சாதி, மதம், மொழி இவற்றின் அடிப்படையில் இல்லாமல் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
மேலும் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் மக்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடாது. இத்தகைய அச்சத்தால்தான் மக்கள் போராடிவருகிறார்கள் மக்களைத் தூண்டிவிட்டு யாரும் போராடவைக்க முடியாது. மக்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வன்முறைக்குக் காரணம் - திருநாவுக்கரசர் தொடர்ந்து பேசிய அவர், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி. சாமி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் அவர் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த திறமையான சட்டப்பேரவை உறுப்பினர் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க:சட்டவிரோத குடிநீர் உற்பத்தி ஆலைகள் - அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!