110 லிட்டர் சாராய ஊறல் போட்டவரை பொறி வைத்துப் பிடித்த போலீசார்! திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர் சீலி கிராமத்தில் சாராயம் தயாரிக்க ஊறல்கள் போட்டிருப்பதாக திருவெறும்பூர் மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைக்கப்பட்ட ரகசிய தகவல் குறித்து திருவெறும்பூர் மது விலக்கு போலீசார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் போலீசார் லால்குடி அருகே பெரியவர் சீலி கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். நேரில் சென்று சோதனை செய்ததில் கள்ளச்சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விசரித்தபோது லால்குடி பெரியவர் சீலி கிராமத்தில் நடைபெறும் ஊர் திருவிழாவிற்காக அதே ஊரைச் சேர்ந்த அந்தோணி டேவிட் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் சாரய ஊறல்கள் மற்றும் அதற்கு பயன் படுத்திய பேரல்களை போலீசார் அழித்தனர்.
தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க போலீசார் அந்தோணி டேவிட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது போன்று கள்ளச்சாராயம் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட அந்தோணி டேவிட்க்கு உடைந்தையாக செயல்பட்டவர்களையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:4 லாரிகளுடன் எஸ்கேப்... 150 டன் பொட்டாஷ் உரத்துக்காக நடந்த கடத்தல்... துணிவுடன் மடக்கிய தூத்துக்குடி போலீஸ்!
கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பது உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைத்தால் உடனடியாக மது விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம், சாராய ஊறல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்றும் கரும்பு ஆலைகள் மற்றும் கெமிக்கல் ஆலைகளில் இருந்து மெத்தனல் எரி பொருள் சரியான முறையில் வெளியே செல்கிறதா என்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தால் எண்ணற்ற உயிர்கள் பறிபோன நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மிகக் கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவையெல்லாம் தெரிந்தும் சிலர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஊறல் போடுவது போன்ற சட்ட விரோத செயல்களில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஷச்சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் - காவல்துறை நடவடிக்கை!