இது குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், ”நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த வெற்றியைப் பெற்றேன். இந்திய அரசு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. முதலிடம் பிடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வெற்றிபெற்றால் தமிழ்நாடு மக்கள் இவ்வளவு ஊக்கம் அளிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. முன்பே தெரிந்திருந்தால் எப்போதோ சிறப்பாக சாதித்திருப்பேன்" என்றார்.
தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு ஊக்கம் அளிப்பார்கள் என நினைக்கவில்லை- கோமதி மாரிமுத்து இதைத் தொடர்ந்து கோமதியின் தோழியும், சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருமான பிரான்சிஸ் மேரி கூறியதாவது:
நான் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறேன். கோமதி ஆசிய தடகளப் போட்டியில் வெற்றியடைந்ததை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொண்டேன்.
இருந்தாலும் அதை அவர் கூற கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சக போட்டியாளர் கைப்பேசியிலிருந்து வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்திருந்தார். அப்போது நாங்கள் இருவருமே அழுதுவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
மகள் வெற்றி குறித்து கோமதியின் தாயார் ராசாத்தி, 'என் மகள் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவள் தனியாக ரொம்ப தூரம் செல்வதை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும்தான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும். சோற்றுக்கு ரொம்ப கஷ்டமிருந்த போதும் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம்' என தெரிவித்தார்.