திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் நடுகல் கூறும் வரலாறு நூலை வெளியிட்டார். கல்வெட்டு ஆய்வாளர் கரூர் ராஜூ முதல் பிரதியினை பெற்றுக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘நடுகற்கள் வரலாறு, கலாசாரம், அரசர்களின் ஆட்சி, மொழி, போர் மற்றும் போர் முறைகள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.
நாடு, இனம் காத்து மாண்ட போர் வீரர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. போர் வீரர்களின் வீரம், தியாகத்தைப் போற்றும்படி அவர்களது நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன் கல், புலிகுத்திக்கல், நவகண்டம், ஆயுத கல் எனப் பலவகை உள்ளது.
பண்டைய காலத்தில் அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றி பெற்று காடுகள் வழியாக வரும் போது புலி, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளுடன் சண்டையிடும் போது உயிரிழக்கும் வீரனுக்கு அந்த இடத்திலேயே நடுகல் நட்டு வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதை புலிக்குத்திக்கல் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல் பன்றி குத்திக்கல், குதிரை குத்திக்கல், யானைப் போர் நடுகல் எனப் பல வகைகள் உள்ளது. அவற்றுள் ஒன்று எருது பொருதார் கல் என்பதாகும். இதில் காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.