திருச்சி : ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு ஒரு குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில நாள்களே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அருகில் எலமனூர் பகுதியைச் சேர்ந்தவரின் மகள் நந்தினி(19)(பெயர் மாற்றப்பட்டது) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரும் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இது தெடார்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது இந்த கல்லூரி மாணவியின் குழந்தை எனத் தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது.
அபாயகரமான உடல்நிலையில் இருந்த இந்தக் கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னதாக நீதிபதியிடம் இக்கல்லூரி மாணவி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்கு மூலத்தில் தனக்கு விஷம் ஊற்றியதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .இதில் அந்தக் கல்லூரி மாணவி உறவினர்கள் 2 பேர் மீது பரபரப்பு குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜீயபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100-வது முறையாக சிறைக்கு சென்ற பலே திருடன்