திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றபோது ஆம்புலன்ஸில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி சென்றது. அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை விரட்டி சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்றது.
இதைத்தொடர்ந்து பேராசிரியையின் பெற்றோர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை தேடிவந்த நிலையில், துவரங்குறிச்சி அருகே அந்த கும்பல் மகாலட்சுமியை விட்டுச் சென்றது. இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.