திருச்சி: 274 சைவத்தலங்களுக்குள் ஈடு இணையற்றதாக கருத்தப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் தேரோட்ட திருவிழா கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்தநிலையில் நடப்பாண்டுக்கான சித்திரை தோரோட்ட விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிறப்பு அலங்காரங்களில் அம்பாளும் , தாயுமானவரும் யானை , தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினர். இதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று (மே 13) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் அம்பாளுடன் தாயுமானசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறிய தேரில் குழலம்மை தாயார் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழாவையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!