தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்னநகர் அமலோற்பவம் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் முதற்கட்டமாக வயலின், பரதநாட்டியம், வீணை ஆகிய சான்றிதழ் பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மைய இயக்குநர் அந்துவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான்கு ஆண்டுகள் கொண்ட இந்த பாடத்திட்டத்திற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறும்.
திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இசைப்பள்ளி ஆறு மாதங்களுக்கு ஒரு கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு கிரேடுகள் கொண்ட கல்வி திட்டமாக இது இருக்கும். வகுப்புகள் மாலை 5 முதல் 6 மணி வரை மற்றும் 6 மணி முதல் 7 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறும்.
பயிற்சியின் நிறைவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:நான்காம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் - பள்ளியில் நடந்த கொடூரம்!