திருச்சி மாவட்டம் அண்ணா கோளரங்கத்திற்கு எதிரே பச்சநாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்த ராஜரத்தினம் (63) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு (பிப்.02) கோயில் நிர்வாகிகள் வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றனர். காவலாளி ராஜரத்தினம் மட்டும் பணியில் இருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.03) அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் இருவர் காவலாளியை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த ராஜரத்தினம் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து கோயிலின் அம்மன் கழுத்திலிருந்த இரண்டு தங்க காசு, உண்டியலில் இருந்த பணம், காவலாளி கையில் வைத்திருந்த 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்த காவலாளி இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின்பேரில் நிர்வாகிகள் விரைந்து வந்து திருச்சி விமான நிலையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், கோயிலுக்குச் சென்று காவல் துறையினர் காவலாளியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, காயமடைந்த காவலாளிக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயிலில் திருடுபோன 3 சாமி சிலைகள் பறிமுதல் : 7 இளைஞர்கள் கைது