தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்வில் கெடுபிடி: வருத்தம் தெரிவிக்கும் சபரிமாலா! - நீட் தேர்வு

திருச்சி: வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி பயில்வதற்காகவே, நீட் தேர்வின்போது தமிழ்நாடு மாணவர்களிடம் கெடுபிடி காட்டப்பட்டது என நீட் தேர்வுக்காக ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா கூறினார்.

தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்வில் கெடுபுடி: வருத்தம் தெரிவிக்கும் சபரிமாலா!
Neet exam protest

By

Published : Sep 15, 2020, 9:47 PM IST

நீட் தேர்வைக் கண்டித்து அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை, மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை தாங்கி நடத்தினார். திருச்சி மாவட்டச் செயலாளர் ஜனுல்லா மகது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், திருச்சி மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது சபரிமாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "28 நாள்களில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 8 லட்சம் ரூபாயை பெற்றோர்கள் செலவு செய்துள்ளனர்.

இந்தாண்டு கடைசி முயற்சி என்பதால் தேர்வில் தோல்வியடைந்து விட்டால் தனது தந்தை முகத்தில் எப்படி விழிப்பது என்ற அச்சத்தில் திருச்செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பே இல்லை. முழுக்க முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து இருக்கவே முடியாது.

நீட் கேள்விகளுக்கும் மாநில கல்வித் திட்டத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. தனியார் பயிற்சி மையங்களில் தரமில்லை. வட மாநிலத்தவர்கள் இங்கே வந்து மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக இங்கே தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் கெடுபிடி அதிக அளவில் காட்டப்பட்டது.

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் உள்ளனர். பெற்றோர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபடுகின்றனர். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர் முகத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

எந்த அரசும் வந்து உங்களது பெற்றோருக்கு உதவி செய்ய முடியாது. சில லட்சம் ரூபாய் பணத்தையும், ஒருவருக்கு அரசு வேலையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிக் கொள்ளும். அதனால் மாணவ மாணவிகள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details