திருச்சி:தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.
முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான சிலம்பச்சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.
மேலும், சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படுகிறது. பேச்சு வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க கலை காலப்போக்கில் மறைந்துகொண்டே வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த கலை கற்பிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:அனல் பறக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்; திருச்சியில் திரளும் திமுகவினர்
இந்நிலையில் உலகப்பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலைச் சங்கம் சார்பாக மலேசியாவில் உலக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா, இந்தியா, இலங்கை, அயர்லாந்து, நேபாளம், கத்தார், சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.