ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கப்படும் - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு திருச்சி:தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டமானது நேற்று (அக்.17) திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாய அமைப்புகளைக் கொண்ட விவசாயிகள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கள்ளுக்கு அனுமதி கேட்பதுவும், கள்ளுக்கடைகளைத் திறக்க கோருவதும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்ற இரண்டும் புரிதல் இன்மையின் வெளிப்பாடு. 1950-இல் உணவு தேடும் உரிமையின்படி, கள் இறக்குவதும், பருகுவதற்குமான அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஆனால், தமிழக அரசு கலப்படத்தைக் காரணம் காட்டி கள்ளுக்கான அனுமதி உரிமையைப் பறித்துக் கொண்டது. அண்டை மாநிலங்களில் கள்ளுக்குத் தடை இல்லை. மேலும், அங்கு கள்ளில் கலப்படம் இருப்பதை அந்த மாநில அரசுகள் கட்டுப்படுத்தும் நிலையில், தமிழகத்தில் மட்டும் கள்ளில் கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தமிழக அரசு ஆளுமை இல்லாத அரசா? அப்படி என்றால் கலப்படத்தைக் கட்டுப்படுத்தும் ஆளுமை உள்ளவர் முதல்வராக வரட்டும்.
மேலும், ஒரு மரத்துக் கள்ளை 48 நாட்கள் பருகினால் பல நோய்கள் குணப்படுத்தும் என்பது மருத்துவம். ஆனால், கள்ளுக்கு ஏலம் கடை என்று இருந்தால், ஒரு மரத்து கள் கிடைக்காது. கலப்படம் நிறைந்த பல மரத்து கள்தான் கிடைக்கும். இப்படியான நிலையில், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47-இல் சொல்லப்பட்டிருக்கும் விதிகள் பயனற்று போகின்றன.
அரசியல் அமைப்புச் சட்டப்படி கள்ளுக்குத் தடையும் கூடாது, கடையும் கூடாது. எனவே, கள்ளை உணவாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
தமிழக அரசு, மது விலக்குச் சட்டப்படி கள் இறக்குவோர் மீது நடவடிக்கை எடுத்தால், தமிழக அரசிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி, நாங்கள் அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குகிறோம், நீங்கள் மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றீர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டது மது விலக்குச் சட்டமா? மது விலக்குச் சட்டத்திற்கு உட்பட்டது அரசியல் அமைப்புச் சட்டமா? இதற்கு அரசால் பதில் சொல்ல முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே, இந்த போராட்டம் வெற்றி அடையும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர இன்றும், நாளையும் புதிதாக விண்ணப்பிக்கலாம்!