திருச்சி:தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் மூத்தத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் 34 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தைப் போல் தமிழ்நாட்டிலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆன்லைன் கல்வி என்பது புட்டிப்பால் மூலம் பிள்ளைகளை வளர்ப்பது போன்றதாகும்.
பள்ளியில் கல்வி என்பது தாய்ப்பால் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்குச் சமமாகும். கல்வி அமைச்சர் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரேநாளில் மூன்று விதமான அறிக்கைகளை வெளியிடுகிறார். ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு எதிரான ஒரு அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து வேண்டும். நாட்டிலேயே அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் நலத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பழிவாங்கும் போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழக ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருள்களை பள்ளிகள் நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை. பள்ளிகளிடம் வவுச்சர் மட்டுமே கேட்டுப் பெற்று மிகவும் தரமற்றப் பொருள்களைப் பள்ளிக்கு அளிக்கின்றனர். பள்ளிக்கு வழங்கப்படும் பொருள்களில் சுமார் 75 விழுக்காடு ஊழல் நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு மட்டுமல்ல ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்ப்பும்தான் பிரதிபலித்தது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் ஊழல்களைப் பொதுமக்களிடம் அம்பலப்படுத்துவோம்" என்றார்.