திருச்சி:திருச்சியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திவ்யா குப்தா செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'தமிழகத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியா ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசமாக உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதற்காக, குழந்தைகள் மற்றும் அந்த துறையினர் சந்திக்கும் பிரச்னைகளை முற்றிலுமாக தீர்க்க வேண்டும்.
திருச்சி, பெரம்பலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கரோனா பாதிப்பால், 45 இறப்புகள் நிகழ்ந்தன என்பதைத் தவிர, அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை அரசிடமிருந்து இழப்பீடு பெறவில்லை.
உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும். பெரம்பலுார், அரியலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 770 பேரிடம் குழந்தைகள் பிரச்னை தொடர்பாக மனு பெறப்பட்டது. அதில் 97 சதவீதம் குழந்தைகள் ஒற்றை பெற்றோருக்குச் சொந்தமான மிக மோசமான சூழ்நிலையில் உள்ளனர்.