சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு முன்பே கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறார்கள். அணையை கட்டிவிட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வர போவதில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்; "டெல்லியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அதன்பின், காவேரியிலிருந்து தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த உள்ளோம்.
தமிழகத்திற்கு கடந்த 10ஆம் தேதி வரை 60 டி.எம்.சி நீரை காவேரி ஒப்பந்தப்படி கர்நாடகா தந்து இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 6 டி.எம்.சி. தண்ணீரை தான் தந்ததுள்ளது. கர்நாடகா காவேரி படுகையில் உள்ள பெரிய அணைகளில் கிட்டத்தட்ட 64 டி.எம்.சி. நீர் இருக்கிறது. ஆனால் மேட்டூரில் 15 டி.எம்.சி. நீர் தான் உள்ளன. சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து உள்ளனர்.
இதில், 3 லட்சம் ஏக்கர் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் கருகி கொண்டு இருக்கிறது. ஒரு வாரத்தில் தண்ணீர் விடவில்லை என்றால் 2 லட்சம் ஏக்கர் நாசமாகி விடும். உணவு பஞ்சம் ஏற்படும். கர்நாடக அரசு பொய் சொல்லி கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம், காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி ஒழுங்கு முறை குழு, ஒப்பந்தம் ஆகியவற்றை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது" என்றார்.