திருச்சி:ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிமுத்து மற்றும் அச்சங்கத்தை சேர்ந்த ராஜா, ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில், "ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு PETA, CUPA உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றியது. இருந்தபோதும் உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் வராமல் தமிழ்நாடு அரசு பார்த்து கொள்ள வேண்டும் இந்நிலையில் PETA, CUPA உள்ளிட்ட அமைப்புகள் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை உள்ளது. அந்த பட்டியலிலிருந்து காளையை ஒன்றிய அரசு நீக்கவில்லை. அதை வைத்துக்கொண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை வாங்க அந்த அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.
அந்த வழக்கில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் தங்களையும் இணைத்து கொள்ள இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். வரும் 23 ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசும் இவ்விவகாரத்தில் உறுதியாக வாதாடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த வித தடையும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். அது தொடர்பாக மத்திய அமைச்சர்களையும் சந்திப்போம்" என்றனர்.
இதையும் படிங்க:”நம்ப முடியாத திட்டத்தை இந்த ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம்” - செந்தில் பாலாஜி