அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது தொடர்பாக இன்று கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இருந்திருந்தால் எப்போதோ நடந்தியிருப்பார்கள். தற்போது எப்படியாவது யார் மூலமாவது தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மேயர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஏதோ திட்டமிட்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. எனினும் இப்போது தேர்தல் வந்தாலும் எங்களது தொண்டர்கள் தயாராக உள்ளனர். பதிவு பெற்ற கட்சி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நிரந்தர சின்னம் கேட்டு போட்டியிடுவோம். சின்னம் தந்தாலும், தராவிட்டாலும் சுயேட்சையாக போட்டியிட தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராக உள்ளனர்.