திருச்சி:தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளை தொடக்கி வைத்தார்; அதன்பின், பிரதான உந்துகுழாய்கள் பதிக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நகராட்சி தேர்தல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி பிராட்டியூர் கருமண்டபம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று புதிய நீர் தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவு கொடுத்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்; அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் துவங்கி விட்டோம்; அதிமுக ஆட்சியில் இருந்தபோது, எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்களோ அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் நடத்தினோம். ஆனால் அவர்கள் தேர்தல் நடத்திய போது நாங்கள் எல்லாம் சிறையில் இருந்தோம்." என்று கூறினார்.
மேலும், திருப்பத்தூரில் 4 வாக்கு வித்யாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளது. மிக மிக நேர்மையான முறையில் திமுக அரசு இந்த தேர்தலை நடத்தி உள்ளது. ஏற்கனவே ஒதுக்கியபடி விதிமுறைகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை அதிமுக தேடி கண்டுபிடித்து சொல்கிறது.