திருச்சி, என்.ஐ.டி கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் 19 கோடி மதிப்பிலான அதிநவீன உயர் செயல்திறன் அமைப்பு கொண்ட பரம்பொருள் என்ற பெயரில் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வானிலை, பருவ நிலை மாறுபாடு, இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல், பொறியியல், தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவர்கள் அதிநவீன செயல்திறன் கொண்ட கணினி வசதிகளுடன் பெற முடியும் என கூறப்படுகிறது.
திருச்சி என்.ஐ.டியில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டரை திருச்சி என்.ஐ.டியின் இயக்குனர் அகிலா முன்னிலையில், ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர் பட் புதன் கிழமை (மே6) திறந்து வைத்தார்/ தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் பட், ”தேசிய தொழில்நுட்ப கழகங்களிலேயே முதன்முறையாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அதிநவீன செயல்திறன் மற்றும் சேமிப்புத் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் நிறுவப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இதன் மூலம் அதி நவீன வசதியுடன் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.
இது குறித்து பேசிய திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அகிலா, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் மட்டுமல்லாது, சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இது குறித்த விவரங்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி - புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்