தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளிகளில் சிலம்பம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சிலம்பம் சங்கம் கோரிக்கை! - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடலூரில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு, திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட அமெச்சூர் சங்க செயலாளர் விஜயகுமார், சிலம்ப ஆசான்களை அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சிலம்பம் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை விடுத்தார்.

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் 35 பதக்கங்கள் வென்று அசத்திய திருச்சி மாவட்ட மாணவர்கள்
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் 35 பதக்கங்கள் வென்று அசத்திய திருச்சி மாவட்ட மாணவர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:42 PM IST

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் 35 பதக்கங்கள் வென்று அசத்திய திருச்சி மாவட்ட மாணவர்கள்

திருச்சி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி, கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த அக்.5 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம்(அக்.08) நிறைவுபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு, அவர்களது திறமைகளை வெளிபடுத்தினர். மினிஸ்டர் ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில், திருச்சி மாவட்டத்தில் இருந்து 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் திருச்சி மாவட்ட மாணவர்கள், 13 தங்கம், 6 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று அசத்தினர். போட்டி நிறைவுபெற்றதையடுத்து, நேற்று (அக்.09) ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாலை அணிவித்து‌ம் சால்வை அணிவித்தும் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜயகுமார், பயிற்சியாளர்கள் சரவணன், கமலேஷ் லோகநாதன், சேஷாத்திரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட அமெச்சூர் சங்க செயலாளர் விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில், திருச்சி மாணவர்கள் 35 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் வரும் டிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஏசியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஏசியன் போட்டியிலும் நிச்சயமாக வெற்றி வாகை சூடுவோம்.

தற்போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏசியன் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க விளையாட்டு துறை அமைச்சர் உதவி செய்ய வேண்டும்.மேலும் தமிழகத்தில் சிலம்ப ஆசான்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவி யுவஹரிணி கூறுகையில், "ஏசியன் அளவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெறுவதையே இலக்காக வைத்துள்ளேன். இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்படுகிறேன். என்னுடைய தாய் தந்தை மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் ஊக்கத்தால், நான் தற்போது நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றேன். நான் தற்போது விளையாட்டு இட ஒதுக்கீட்டில், இலவசமாக கல்லூரியில் படித்து வருகிறேன். விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்க எனது கல்லூரி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார்", எனத் தெரிவித்தார் வெற்றி வாகை சூடிய யுவஹாசினி.

இதையும் படிங்க:கோபி சாந்தா To மனோரமா ஆச்சி.. சிகரம் தொட்ட நடிப்பு ராட்சசி நினைவு நாள் இன்று!

ABOUT THE AUTHOR

...view details