திருச்சி: உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம் சார்பில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி, கடந்த 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கால்களை கட்டிக் கொண்டு ஒற்றைச் சிலம்பம் பிரிவில் தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையினை நிகழ்த்தினர்.
இந்த சாதனை நிகழ்வில் திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் விளையாட்டு பிரிவை சேர்ந்த 3 மாணவர்கள் தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் உடன் பதக்கங்கள் உடன் நேற்று (ஜூலை 24ஆம் தேதி) மாலை திருச்சி வருகை புரிந்தனர். சிலம்பத்தில் சாதனை புரிந்த மாணவர்களை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் மற்றும் நிர்வாகிகள், வெற்றி பெற்ற மாணவர்களின் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
இதுகுறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக், “யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாட்டு பிரிவு தொடங்கப்பட்டு, அதன் வாயிலாக இலவசமாக மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே மற்றும் சிலம்பம் மற்றும் சில பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் பயிற்சி பெற்ற அர்சத் பஹிம், முகமது இர்ஃபான், முகமது சல்மான் ஆகிய 3 மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தி அதற்கான சான்றிதழை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.