திருச்சி:தமிழ்நாட்டில் பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ள நிலையில், மேலும் பல பிரச்சனைகள் இருந்து வந்ததால், தமிழ்நாடு முழுவதும் ஜூன் 26ஆம் தேதி முதல் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,500 கல்குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில்களுக்கு அமல்படுத்திய காரணத்தால் குவாரிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. அதன் காரணமாக தொழிலை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
கனிமவள கடத்தல், கனிம வளக் கொள்ளை என ஊடகங்களில் செய்திகள் வருவதால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்னைகள் வந்ததில்லை. தற்போது புதிதாக பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.