திருச்சி: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்ற பொதுக்கூட்டம் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்றது. இந்தக் பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "திமுக தொடங்கியவுடன் தேர்தலில் போட்டியிடலாமா? என்ற முடிவு திருச்சியில் தான் எடுக்கப்பட்டது. முன்பு இந்த பொதுக்கூட்டமானது மாநாடாகவே நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுக்கூட்டமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக முதன்மைச் செயலாளர் நேரு மற்றும் மாவட்ட செயலாளர்கள், ஐந்து மாநாடுகள் ஒரே இடத்தில் நடப்பது போல் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்தத் திருச்சி பொதுக்கூட்டம் அமைந்துள்ளது.
திமுக ஆட்சியில் இருந்தபோது அமைத்த அனைத்து கட்டமைப்புகளையும் அதிமுக ஆட்சியினர் அழித்துவிட்டனர். ஆட்சியில் இருந்தபோது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பதவியிழந்த முதலமைச்சர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சூழ்நிலை காரணமாக சசிகலா சிறைக்கு சென்றார். இந்தச் சமயத்தில் காலில் விழுந்து, ஊர்ந்து சென்று எடப்பாடி பழனிசாமி பதவியைப் பெற்றார். பின்னர் பாஜகவிற்கு அடிமையாகி, அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுத்து விட்டார். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை நாசமாக்கிவிட்டனர்.
இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மே 2ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமைய உள்ளது. சமூகநீதி, மாநில சுயாட்சி, நவீன மேம்பாடு, கல்வி வளர்ச்சி, சமத்துவ ஆட்சியாக அமையும். எனது கனவு திட்டத்தை தற்போது திருச்சியில் அறிவிக்கிறேன். தொலைநோக்கு திட்டமாக 7 திட்டங்கள் இங்கே அறிவிக்கப்படுகிறன. இதற்கு ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என பெயரிடப்பட்டுள்ளது.
முதலில் 7 துறைகள் சீரமைக்கப்பட உள்ளன. 10 ஆண்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். அதற்கு முதலாவதாக பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு துறைகளில் கவனம் செலுத்தப்படும்.