தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்தலுக்கு பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழிய போகிறது..!' - ஸ்டாலின் அனல் பேச்சு - palanisamy

திருச்சி: "ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது" என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சியில் ஸ்டாலின் பரப்புரை

By

Published : Apr 13, 2019, 7:16 PM IST

திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று, திருச்சியில் நடந்த தென்னூர் உழவர் சந்தை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். இதில், தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது,

தமிழகத்தில் ஆட்சி கொடுமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெயில் கொடுமை பரவாயில்லை. மோடியையும், எடப்பாடியும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்கிறது. மத்தியில் சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உதவாக்கரை ஆட்சியும் நடக்கிறது. அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும், பாஜக தேர்தல் அறிக்கைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அதிமுக கூட்டணி கொள்ளை அடிக்கும் கூட்டணி. திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து போராடிய கட்சிகள்தான் கூட்டணி அமைத்துள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்பிக்கள் 37 பேரும் நாட்டுக்கு என்ன செய்து கிழித்தார்கள் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டும். கரூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தருமபுரி ஆகிய தொகுதிகளில் ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை மக்கள் கேள்வி கேட்டு விரட்டியடிக்கின்றனர். ஒரத்தநாட்டில் முதல்வர் மீது செருப்பு வீச்சு நடந்துள்ளது. இந்த விரக்தியில் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார்.

கேவலமான ஒருவர் முதல்வராக இருந்தால் கேவலமாகத்தான் பேசுவார். எனக்கு பதில் கூறினால் ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்து விடும் என்று முதல்வர் பேசியுள்ளார். கொஞ்சம் பொறுங்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும். அதன் பின்னர் திமுக ஆட்சி அமையும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது. மண் புழுபோல் தவழ்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று நான் கூறினேன். அதற்கு மண்புழு நல்லது செய்யும் என்று அவர் பதில் கூறியுள்ளார். ஆனால் மண்புழு பூமிக்குள் செல்லும். இவர் தவழ்ந்து சசிகலாவின் கால்களுக்குள் சென்றார், என்றார்.

திருச்சியில் ஸ்டாலின் பரப்புரை

இந்த பரப்புரை பொதுக்கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியினரும், பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் அனைத்து இருக்கைகளும் காலியாக கிடந்தன. இதை தொடர்ந்து கூட்டம் தாமதமாக சுமார் 10 மணியளவில் தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் பலரும் தலையில் துண்டு போட்டுக் கொண்டும், நாற்காலிகளை தலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். வெயில் கொடுமையினால் சிறிது நேரம் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 50 நிமிடத்திற்கும் மேலாக ஸ்டாலின் பேசினார். இதனால் வெறுப்படைந்த பலரும் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று விட்டனர். இதனால் ஸ்டாலின் பேசும்போது பல நாற்காலிகள் காலியாக கிடந்தன. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெயில் கொடுமையில் சிக்கித் தவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details