திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தாயார் ரெங்கநாச்சியார் பிரகாரத்தில் நவராத்திரி உற்சவம் நேற்று(அக்.6) தொடங்கியது. வரும் 14ஆம் தேதி வரை 9 நாட்கள் இந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது.
கொலு மண்டபத்தை அடைந்த தாயார்
உற்சவத்தின் முதல் நாளான நேற்று ரெங்க நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 'கொலு மண்டபம்' வந்தடைந்தார். அங்கு 'நவராத்திரி கொலு' நடைபெற்றது.
பின்னர் இங்கிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். 2ஆம் திருநாளான இன்று முதல் 6ஆம் திருநாளான 11ஆம் தேதி மற்றும் 8ஆம் திருநாளான 13ஆம் தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பாடாகி கொலு மண்டபத்தை வந்தடைவார்.