தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை: ஸ்ரீரங்கம் எம்எல்ஏ உறுதி - ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி கூறினார்.

srirangam
srirangam

By

Published : May 13, 2021, 10:12 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி இன்று (மே 13) ஆய்வு பணிகளை தொடங்கினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து புதிதாக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ள இனாம் குளத்தூர், மறவனூர் ஆகிய பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கரோனா சிகிச்சை மையங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 10 சிலிண்டர் தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் தட்டுப்பாட்டை போக்க ஆட்சியர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்க மருத்துவமனையில் உள்ள 50 படுக்கைகளில் 40 நோயாளிகள் உள்ளனர். 22 ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

சிகிச்சை மையங்களில் உள்ள குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். மக்கள் சேவை தங்கு தடையின்றி நடைபெறும். இதன்மூலம் அடுத்த 15 முதல் 20 நாள்களில் தமிழ்நாட்டிலிருந்து கரோனாவை ஒழிப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தீவிரமாக இருக்கிறார். மக்களின் உயிரும், நலனும் தான் முக்கியம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details