திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுக்கு நூலகர் தேவகி தலைமை வகித்தார்.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவரான விஜயகுமார் பேசுகையில், ”பேரறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, நடராஜன் - பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாக செப்டம்பர் 15, 1909 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் நடுத்தர நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். தன்னுடைய குடும்பப் பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் எழுத்தராக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப்படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.
1930ஆம் ஆண்டில் தனது 21 வயதில் ராணி அம்மையாரை மணம் முடித்தார். பின்னர் 1934 ஆம் ஆண்டில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ. (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்குப் பிறகு ஆங்கில ஆசிரியராகப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிகை, அரசியலில் ஈடுபாடு கொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார்.
அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அண்ணாவை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதிக் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு 1949ஆம் ஆண்டில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து ’திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் திமுக வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு 1967ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாநில அமைச்சரானார் அண்ணா. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த பெயரை ’தமிழ்நாடு’ என்று மாற்றி தமிழ்நாட்டின் வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றார்.
அது மட்டுமல்லாமல் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார். அவரது ஆட்சியில் தான் ’இரண்டாம் உலக தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்க பயணத்தை மேற்கொண்ட அவருக்கு யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் ’சுபப் பெல்லோஷிப்’ என்ற விருதை வழங்கி மரியாதை அளித்தது. இந்த விருதைப் பெற்ற அமெரிக்கர் அல்லாத ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் என்ற பெருமையை அவரே பெற்றிருக்கிறார். பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக மாண்புறு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
அண்ணா அரசியல் துறையில் மட்டுமல்லாது, கலைத்துறையிலும் மேதமைக் கொண்டவராக விளங்கினார். நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக திகழ்ந்த அவர் ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளராகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய பாய்ச்சலை அவரது தனித்த உரைவீச்சு உருவாக்கியது என்றால் மிகையில்லை.