தமிழ்நாடு, புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அயோத்தி பிரச்னை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கின்றது. இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நாட்டின் மதச்சார்பின்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைதியைக் கையாள வேண்டும்.
நம் நாட்டின் பாரம்பரியம், பரஸ்பர மரியாதை, ஒற்றுமை ஆகியவற்றை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய பாஜக அரசு விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருப்பது மலிவான அரசியலாகும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறிய மோடியும், அமித் ஷா-வும் தற்போது காங்கிரஸ் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அவர்களை அழிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியை நாட்டில் இல்லாமல் செய்துவிடலாம் என்று திட்டமிட்டு சதிச்செயலில் ஈடுபடுகின்றனர்.
முன்னாள் பிரதமர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எஸ்.பி.ஜி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதிவரை எஸ்.ஜி.பி பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய இரு பிரதமர்கள் தங்களது இன்னுயிரை இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த முடிவு அபாயகரமானதாகும். அதனால், இந்த உத்தரவை திரும்பப் பெற்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானதாகும். காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
எஸ்.பி.ஜி கோட்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் மீறி, பொதுக்கூட்டங்களில் கட்டுப்பாட்டு வளையத்தை மீறி சென்றதாகக் கூறுவது அபத்தமானது. அப்படி என்றால் பிரதமர் மோடியும் பலமுறை எஸ்.பி.ஜி கட்டுப்பாடுகளை மீறியுள்ளார். இந்த வரைமுறை அவருக்கும் பொருந்தும். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. பணமதிப்பிழப்பின் போது பிரதமர் அளித்த எத்தகைய உத்தரவாதமும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது தான் மிச்சம். பயங்கரவாதச் செயல்களும் குறையவில்லை. கறுப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. ஊழலும் அதிகரித்துவிட்டது. ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றபோதே நாட்டின் பொருளாதார நிலை சிறப்பான அளவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. மூத்தத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் பணியை அரசு அல்லது அரசு சார்ந்த முகமைகள் தான் மேற்கொள்ள முடியும் என்று சம்பந்தப்பட்ட இத்தாலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்தச் செயலை யார் செய்தது? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தற்போது பேச்சுரிமை, உணவு உரிமை, ஆடை உரிமை பறிக்கப்பட்டு, தற்போது தொலைபேசி உரையாடல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஏழை, எளிய மக்களுக்காக போராட்டம் நடத்துகிறது. ஆனால், பாஜக தொழிலதிபர்களுக்கு பக்கபலமாக விளங்குகிறது.
தற்போது மகாராஷ்டிராவில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்படுவதாக பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. இதே தான் கர்நாடகாவிலும் நடந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மூன்று ஆண்டுகளாக விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் ஆதரவளிப்பார்கள். திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஊழல் மற்றும் பாஜகவின் பக்க பலத்துடன் இயங்கும் அதிமுக அரசை மக்கள் புறக்கணிப்பார்கள்' என்றார்.
இதையும் படிங்க :மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!