திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்.(81). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நந்தகோபால் தனது மகன் பிரபோத குமாருடன் வசித்து வந்தார். மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் பிரபோத குமாருக்கு திருமணமாகவில்லை. பிரபோத குமார் தனது தந்தையான நந்தகோபாலிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பிரபோத குமார் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்றிரவு (ஜனவரி 24) சுமார் 1 மணி அளவில் தந்தை நந்தகோபாலிடம் சொத்துக்களை கேட்டு பிரபோத குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதற்கு நந்தகோபால் மறுத்ததால், அருகிலிருந்த கல்லை எடுத்து அவரைத் தாக்கினார். அப்போது அருகில் இருந்த அலமாரியில் நந்தகோபால் தலை மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நந்தகோபால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 25) காலை 5.30மணியளவில் விமான நிலைய காவல்நி லையத்திற்கு பிரபோத குமார் தொலைபேசி வாயிலாக நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.